Sunday, October 23, 2011

டீரிம்ஸ் திரைப்படத்தின் கனவு காட்சிகளில் வரும் முரண்பாடுகள்



சிக்மன்ட் பிராய்டு (சைக்கோ அனாலைஸிஸ்) ஆய்வின் மூலம் மனித மூளையின் செயல்பாடுகளை மூன்று நிலைகளாக குறிக்கிறார்.

1. ஐ.டி (அகமனம்)
2. இகோ
3. சூப்பர் இகோ

ஐ.டி- அகமனமானது தூங்கும் நிலையிலோ அல்லது சுயநினைவற்று இருக்கும் போதோ அவ்வப்போது தன்னுடைய செயல்பாடுகளை வெளிப்படுத்தும். இதையே கனவு நிலை என்று கூறுகின்றோம்.

இகோ - மனதின் விழிப்பு நிலை, இந்நிலையில் மூளையானது நெறிகளை பகுத்தறிந்து, தற்காப்பு நடவடிக்கை அல்லது தன்னை விழிப்புடன் செயலாற்ற செய்யும்.

சூப்பர் இகோ - மனதின் அகஉணர்ச்சியை உணத்துவதானவும், பகுத்தறிந்து உணர்ந்தவற்றை உறுதிப்படுத்த விழைகிறது.

விழித்திருக்கும் போது, சூப்பர் இகோவால் விருப்பங்கள், விருப்பங்களை வெளிப்படுத்தும் தன்மை ஆகியவற்றை அடக்கப்படுகின்றது. (அடிமை முறை என்பது நம்முடைய மூளையிலிருந்தே உருவாகிறது) கனவு நிலையில், காட்சிக்கு புலனாகாத அல்லது நடைமுறைக்கு ஒவ்வாத வகையில் எண்ணங்கள் வெளிப்படுகின்றன. இந்நிலையில் மறுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட விருப்பங்களை அடைய நினைக்க தூண்டுகிறது. தூக்கத்தில் கனவுகண்டு திடிரென்று விழித்து எழும்போது சூப்பர் இகோ வேலை செய்ய துவங்கி விடுகின்றது.

கனவு நிலையில் என்பது வெற்றிடங்களால் ஆனவை அல்ல. முரண்பாடுகளால் நிரப்பட்டவை. இவ்வாறாக சில திரைப்படங்களில் வரும் கனவு காட்சிகளில் முரண்பாடுகள் இன்றி நடமுறையில் உள்ளது போன்றே காட்சியமைக்கப்படுகின்றன. ஆனால் அகிரோ குரோசோவா எழுதி, இயக்கிய Sunshine Through The Rain என்ற திரைப்படத்தில் கனவுக்காட்சிகள் எவ்வாறு காட்சியமைக்கப்பட்டுள்ளது என்றால் படம் ஆரம்பிக்கும் போது ஒரு நாள் எனக்கு நேர்ந்தது கனவு என்று திரையில் எழுத்து மறைந்ததும், கதவுயில்லாத பெரிய வாயிலை கொண்ட வீட்டின் உள்ளிருந்து சிறுவன் கதவை திறந்து கொண்டு வெளியே வருகிறான். வெளியில் வெயிலோடு சேர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. முதலில் வீட்டின் முற்றத்தில் வழியாக மெதுவாக நடந்து வந்தவன் திடிரென்று ஓடி வந்து கதவில்லாத வாயிலில் நிற்கிறான். வெயிலால் உருவான வாசலின் நிழலானது சிறுவன் மேல் படுவதால் இடை வரை வெளிச்சமாகவும், இடைக்கு மேல் சற்று மங்களாகவும் காட்சி காணப்படுகின்றது.முற்றத்தின் இடப்புற வாசலிலிருந்து குடையோடு சிறுவனின் தாய் வருகிறாள். முற்றத்தில் காயவைக்கப்பட்டுள்ள பண்டங்களை மழையிலிருந்து அகற்றுகிறாள். சிறுவன் வெளிவாசலில் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக நகர்கிறான். அவனுக்கு பின்னால் முற்றத்தில் பண்டங்களை மீட்டுக்கொண்டிருந்த அவனின் தாய் வந்த வாசல் வழியாக சென்று விட்டு மறுபடியும் முற்றத்தில் காய வைக்கபட்டிருந்த எஞ்சிய பண்டங்களை எடுக்கிறாள். அப்போது வாசலில் நிற்கும் தன் மகனான அச்சிறுவனை வீட்டிற்குள் செல்லும்படி கூறுகிறாள் சிறுவன் வாசலில் முற்றத்தில் நிற்கும் தன்னுடைய தாயை பார்த்து திரும்பி நிற்கிறான். தாய் வானத்தை பார்த்து கூறுகிறாள் வெயில் அடித்துக் கொண்டிருக்கிருக்கும் இதே வேளையில் மழையும் பெய்து என்கிறாள். இந்த மாதிரியான நேரத்தில் நரிகள் கல்யாணத்திற்காக ஊர்வலமாக செல்லும் அவற்றை யாரும் பார்க்கக்கூடாது என்று அவைகள் விரும்பும். அவ்வாறு மீறி நீ பார்க்க நேரிட்டால் அவைகளுடைய கோபத்திற்காக ஆளாக நேரிடும். என்று அச்சிறுவனை பார்த்து கூறிவிட்டு வீட்டிற்குள் சென்று வீடுகிறாள் தாய். திரும்பி பார்க்கிறான் வெளியே சிறிது நேரம் கழித்து முற்றத்தை நோக்கி திரும்பி பார்க்கிறான் அவனுடைய தாய் அங்கில்லை மறுபடியும் வெளியே பார்த்தவாறு திரும்பி நிற்கிறான்.
அடுத்த காட்சி :
பெரிய மரங்கள் நிறைந்த காட்டில் மரங்களுக்கிடையில் பச்சை நிற புதர் செடிகள் இருக்கின்றன. அங்கு இசை ஆரம்பமாகிறது. மேகங்கள் புகை மூட்டமாக வருகிறது. சிறுவன் மரத்தின் பின்புறத்தில் ஒளிந்திருந்து பார்க்கிறான். கையில் இசை கருவிகள் இல்லை வேறு ஏதோ உருளையாக வைத்திருக்கிறார்கள். இரு வரிசைகளாக மனித உருவில் முகத்தில் வேடமிட்டு இசைக்கேற்ப நடந்து வருகிறார்கள். இச்சிறுவன் ஒளிந்திருக்கும் மரத்தை கடந்து செல்லும் போது நரிகளாக சித்தரிக்கப்பட்டவர்கள் பார்த்து விட அங்கிருந்து ஓடி வீடு வருகிறான், வாயிலில் அவனுடைய தாய் அவனை பார்த்து போய் பார்த்துட்டு வாரீய என்று கேட்கிறாள். மேலும் கோபபட்ட நரிகள் வீட்டிற்கு வந்துவிடும் அதனால் உன்னை வீட்டிற்குள் அனுமதிக்கப் போவதில்லை, அச்சிறுவனிடம் கத்தியை கொடுத்து அவை உன்னை விடாவிட்டால் நீ கத்தியால் உன்னை கொன்று கொல்! உடனடியாக சென்று மன்னிப்பு கேட்டுவிட்டு வந்து என்னிடம் கத்தியை திருப்பி கொடு என்றி கூறிவிட்டு ஒரு பக்க கதவை அடைக்கிறாள். அவைகள் எப்போதுமே மன்னிப்பதில்லை எனவே நீ சாக தயாராக இரு என்று கூறிக் கொண்டே அருகில் இருக்கும் மற்றொரு கதவையும் நகர்த்துகிறாள். அப்போது அச்சிறுவன் சிறிது முன் ஓடி வந்து அவைகள் எங்கு வாழும் என்று கேட்கிறான். தேடி போ! அவைகள் வானவில்லின் அடியில் இருக்கும் என்று கூறிவிட்டு கதவை அடைத்து விடுகிறாள் அன்னை. கதவை தள்ளி பார்க்கிறான் சிறுவன் அருகில் இருக்கும் கதவையும் தட்டி பார்த்து விட்டு திரும்பி நின்று பார்த்து விட்டு பின் செல்கிறான்.


முரண்பாடுகள்:
நரிகள் திருமணம் செய்து கொள்ளும் என்று கூறப்படுவது
நரிகள் மழையும் வெயிலுமாக பருவ நிலை நிழவும் போது திருமணம் செய்து கொள்ளும் என்று கூறுவது
நரிகள் கல்யாணத்திற்காக ஊர்வலமாக செல்லும் என்பது
நரிகள் என்பவை நரிகள் போல் அல்லாமல் மனித உருவத்தில் உடலையும், முகத்தில்
அன்னை தன் சேயிடம் கத்தியை கொடுத்து அவனை தற்கொலை செய்து கொள்ள சொல்வது
நரியிடம் மன்னிப்பு கேட்க சொல்வது
தாய் தன் குழந்தையை வீட்டிற்குள் வரவிடாமல் பூட்டிக் கொள்வது

உயிரற்ற பொருட்கள் (Non Living Elements) மழை, வெயில், மேகங்கள் நடுபக்கத்திலிருந்து திறக்கும் படியான இரு பெரிய வாயிற் கதவு, சின்ன வாயிற் கதவு, கத்தி,
Living Elements : சிறுவன், அவனுடைய தாய், மரங்கள், புதர் செடிகள்

Saturday, October 15, 2011


சாரல் நகரமும், அதன் பழமைகளும்




இமயமலையில் உருவாகி, கரைபுரண்டு ஓடும் கங்கை நதியின் கரையில் அமைந்த புனிதநகரம் தான் காசி. இந்த காசி நகரம் தென்னிந்தியர்களை பொறுத்தவரை செல்வந்தர்களால் மட்டுமே சென்று, வரும் தூரத்தில் அமைந்திருந்தது. ஏழை மக்களும் இந்த ஆன்மிக பயன் அடைய, இயற்கையாகவே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், சிற்றரின் கரையில் அமைந்திருக்கும் நகரம் தான் தென்காசி. பண்டைய காலத்தில் பாண்டிய மன்னனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக விளங்கியது.
“பரக்கிரம பாண்டியன்” என்ற பாண்டிய மன்னன் வடக்கே காசி சென்று திரும்பினான். அவனுடைய கனவில் சிவபெருமான் தோன்றினார். இதன் விளைவாக இங்கு 1440 ஆம் ஆண்டு காசி விஸ்வநாதர் திருக்கோவில் கட்ட தொடங்கப்பட்டு 1505 ஆம் ஆண்டு கட்டி முடி’கப்பட்டது, வானளாவிய கோபுரமும் எழுப்பப்பட்டது . இக்கோவிக்கு வந்து சிவனை தரிசனம் செய்தால் காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதன் விளைவாகவே இவ்வூரின் பெயர் தென்காசி ஆனது.
மேற்கு தொடர்ச்சி மலையின் மும்மலைகளான “திரிகூட மலைகள்” சங்கமிக்கும் இடத்தின் அடிவாரத்தில்,சுத்தமான தென்றல் காற்றோடு,மழை தூரல் சாரலாக பொழியும் நகரம் தான் தென்காசி நகரம். இம்மலையில் பழைய குற்றாலம்,குற்றாலம், சிற்றருவி, செண்பாகதேவி,தேன் அருவி, புலி அருவி என அருவிகள் பல உள்ளன. இம்மலையில் பல மூலிகைகள் உள்ளதால்,அருவிகள் மூலிகை வாசத்தோடே கொட்டுகிறது. இந்நகரம் பல பண்டைய பெருமைகளை உள்ளடக்கிய நகரம்.முன்னோர்கள் தன் சந்ததியோடு தொடர்ப்பு கொள்ளும் வகையில் சிற்பங்கள், கோவில்கள்,என சான்றுகள் நிறைய உள்ளன.
சிதம்பரேஸ்வரர் கோவில் சிற்பங்களும், ஓவியங்களும் மிகவும் பழமையானவை. சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் சிற்பங்கள், ஒவியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் அழிக்கபட்டுவிட்டன. இங்கு இருக்கும் கிணற்றில் குகைகள் உள்ளன. குகைகள் தூர்ந்து போனாதால் இந்த வழிகள் எங்கு சென்று முடிகின்றன என்பதுகேள்வி எழப்புவதாகவே உள்ளன. இவ்வாறாக வராலாற்றில் என்ன நடந்தது என்பது கண்டறிய முடியாமலே விடுகதையாகவே மிஞ்சி நிற்கிறது சிதைந்த சில சான்றுகள்.
இங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.இது 1824-ல் தீ விபத்தால் சிதைந்து போனது. கோபுரங்கள் 1826 ஆம் ஆண்டு முதல் 1966 ஆம் ஆண்டு வரை இடிந்த நிலையிலேயே இருந்தது. பின் 1996 ஆம் ஆண்டு திரு.சிவந்தி ஆதித்தனார் அவர்களால் பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டு, இன்று கம்பிரமாக காட்சியளிக்கிறது. இக்கோவில் எவ்வளவு பழமையோ, அதுபோல் இக்கோவின் பாதத்தில் அமைந்திருக்கும் கடைகளும் மிகவும் பழமையானவை, பாரம்பரியம் மிக்கவை. அவைகளுள் முக்கியமான கடையாக நூற்றாண்டுகளை கடந்து இன்றும் மக்கள் மனதில் இடம் பிடித்து தன்னுடைய நற்பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளது ஸ்ரீ கிருஷ்ணா விலாஸ் பெரிய லாலா கடை. இக்கடை இனிப்பு மற்றும் கார வகைகளை தரம் குறையாமல் இன்றும் கொடுத்து வருகிறது.
1904ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கடையின் உரிமையாளர்கள் திரு.கிருஷ்ணசிங், திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர்கள், உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ராஜஸ்தானில் இருந்து சொக்கம்பட்டி ஜமீனால் தமிழ்நாட்டிற்கு வணிகம் செய்ய அழைத்து வரப்பட்டவர்கள். காலபோக்கில் பலகாரஙகள் செய்து விற்க துவங்கினர். அவர்கள் கோதுமையில் செய்த அல்வா இங்குள்ள மக்களுக்கு புதுமையாகவும், வித்தியாசமான இனிப்பு வகையாகவும், சுவையாகவும் இருந்த காரணத்தினால் இதுவே அவர்களின் நிரந்தரமான தொழிலாக மாறியது. இப்போது தென்காசி பெரிய லாலா கடையை திரு.கிருஷ்ணரான சிங் அவர்களின் மகன்களான திரு.சுப்பு சிங், திரு.மோகன் சிங் நடத்தி வருகின்றனர்.இப்பரம்பரையின் வாரிசான திரு.திலிப் சிங். கூறும் போது “அல்வா சுவையாக இருப்பதற்கு காரணம் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் தாமிரபரணி மற்றும் சிற்றரின் தண்ணீரே காரணம்” என்கிறார்.
சித்தர்கள் இன்றளவும் வாழ்ந்து வருவதாகவும் கருதப்படுகின்றன. மகாலிங்க மலையும் மிகவும் பழமையானது. இங்கு உள்ள மூலிகைகளும், குகையும் வியப்பூட்டுவனாவாக உள்ளன. சித்திரசபையை கொண்டுள்ள நகரம். வீரத்திற்கும் பங்சமில்லை என்பதற்கு தென்காசியின் அருகில் உள்ள செங்கோட்டையில் பிறந்த வாஞ்சிநாதன் தன் உயிரை கொடுத்து விடுதலைக்கு வித்திட்டார் என்பது கூடுதல் சிறப்பு. இவ்வாறு பல பழமைகளை கொண்டுள்ள இந்நகரம் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் மற்றும் மலையாளிகள் ஒற்றுமையோடும், நட்புணர்வோடும் இருந்த சுற்றுலா தளமான தென்காசியில் தற்சமயம் சில மத பிரச்சனையை சந்தித்து வருவது வருந்ததக்க போக்ககாக உள்ளது
சென்னையின் துயரம் - சேரிகள்
சென்னையின் துயரமாக விளங்குவது கூவம் ஆறும், அந்த ஆற்றின் கரையோரப்பகுதிகளும் தான். சென்னை மாநகரத்தின் ஒட்டு மொத்த குப்பையும், தொழிற்சாலைகளின் கழிவுகளும், இந்த ஆற்றில் கலந்து கடலில் சேருகின்றது. சிலர் சாக்கடையில் வாழும் புழுவைப் போல் இந்த ஆற்றின் கரையோரப்பகுதிகளில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அப்பகுதிகளில் ஒன்றான சைதாபேட்டை, கூவம் ஆற்றின் கரையோரப்பகுதியில் அமைந்திருக்கும் திடீர் குப்பம், டோபிகான ஆகிய பகுதிகளுக்கு கடந்த வாரம் சென்றேன். மழை பெய்து இருந்ததால் அப்பகுதிக்குள் செல்ல முடியாத அளவுக்கு கழிவு நீர் தேங்கி நின்றது. அதையும் தாண்டி துர்நாற்றம் வேறு. ஒரு வழியாக சேரிக்குள் நுழைதேன். நெடுக்கமாக ஒரே ஒரு பாதையும், பாதைகள் முழுவதும் கழிவு நீரும், பாதையின் இருபுறங்களிலும் குடிசை வீடுகள் நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்தது.
ஒற்றையடி பாதை வழியாகக் கடைசியில் அமைத்திருந்த வீடை அடைந்தேன். மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் வீட்டினுள் சாக்கடை நீரும், பிளாஸ்டிக் பைகள், இதனுடன் கருப்பு நிற சகதியாக காணப்பட்டது.
வீட்டின் கூரைப்பகுதியும் வெள்ளத்தால் சேதம் அடைந்திருந்தது. அப்போது அங்கு வசிக்கும் வேலம்மாள் என்ற பெண்ணிடம் இந்த இடத்தை பற்றி விசாரித்தபோது . "இவர்களில் சிலர் இங்கு ஆற்றின் துணி துவைபவர்கள்.

இவர்கள் நிரந்தரமாக இங்கே வசித்து வருகிறார்கள். சிலர் அரசால் இடம் பெயர்த்தப்பட்டவர்கள். இதனால் இப்பகுதிக்கு திடீர் நகரம் என்ற பெயரும் உள்ளது. இப்பகுதிக்கும், கூவம் ஆற்றுக்கும் இடையில் கழிவு நீர், மற்றும் வெள்ளம் புகாமல் இருக்க தடுப்புச் சுவர் ஒன்றை அரசு கட்டிகொடுத்துள்ளது. அந்த பகுதியில் முன்பகுதி ரயில்வே இடம் என்பதால், அந்த இடத்தில் சுவர் கட்டாமல் விடப்பட்டுள்ளது. தடுப்பு சுவரையும் மீறி கழிவு நீர் உட்புக இப்பகுதி தான் காரணமாக அமைகிறது" என்று அவர் கூறினார். இவர் குப்பை பொறுக்கும் தொழில் செய்து வருகிறார். தினமும் நுறு ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆண்கள் பலர் இங்கு மது அருந்தி தன்னுடைய வருமானத்தை அழிகின்றனர். பெரும்பாலான வீடுகளில் அரசுதொலைக்காட்சி பெட்டி இருந்தது.
இவர்களுக்கு சரியான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதியில் சிக்கல் உள்ளது. கழிப்பறைகள் எந்த வீட்டிலும் இல்லை. எல்லாவற்றையும் விட சாக்கடையான கூவம் எந்த நேரத்திலும் உட்புகும், நோய் பரவும் அபாயம் வேறு. இப்படி பல பிரச்சனை இருந்தாலும் இதை பற்றி இம்மக்களுக்கும் எந்த விழிப்புணர்வும் இல்லை. அரசாங்கமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கத்திடம் மக்கள் எந்த கேள்வியும் கேட்டு விடாமல் இருக்க, மக்களின் மூளை நன்கு மலுங்கடிக்கப்பட்டுள்ளது என்பதை அரசு தொலைகாட்சி திட்டம் சென்று சேர்ந்த அளவுக்கு, மற்ற அடிப்படை வசதிகள் அப்பகுதிகளில் இல்லாமல் இருப்பது உணர்த்துகிறது.
குழந்தைகள் கல்வி கற்க செல்கின்றனர் என்பது மட்டுமே மகிழ்ச்சியான ஒன்று. இக்குழந்தைகளின் கல்வியாவது இந்நிலையை மற்றுமா? சென்னை சிங்கார சென்னையாக மாறுமா ?

Thursday, October 13, 2011








சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டியின்
உற்சாகத்தை தொடங்கி வைப்பதே நாங்க தான்






சேப்பாக்கம் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது கிரிக்கெட் மைதானம் தான். அதுவும் இந்தியாவின் அணி, சென்னையின் சூப்பர் கிங்ஸ் அணி ஆடினால், மைதானத்தை சுற்றி அமைந்துள்ள பெல்ஸ் சாலை, விக்டோரியா விடுதிச் சாலை, மற்றும் வாலாஜா சாலை முழுவதும் திருவிழா போல் காட்சியளிக்கும். ஆட்டம் மாலை வேலையில் தொடங்குகிறது என்றால் காலை முதல் மைதானத்தை சுற்றி கிரிக்கெட் ஆர்வலர் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகும். அப்போது ரசிகர்கள் மைதானத்திற்குள் சென்று தங்கள் மகிழ்ச்சியை, ஆரவாரத்தை வெளிப்படுத்தவும், தங்கள் அணிக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிக்கும் விதமாக ரசிகர்கள், அணியினர் அணிந்திருக்கும் டி.சர்ட், தொப்பி, கொடி, ஒலி எழப்பி ஆகியவற்றை எடுத்து செல்கின்றனர். இவை மைதானத்தின் வெளியே விற்கப்படுகின்றன. இந்த பொருட்களை எல்லாம் பாரிமுனையில் இருந்து வாங்கி வருகின்றனர். இந்த விற்பனையாளர்கள் முகத்தில், அணியின் அடையாளத்தை வண்ணம் தீட்டி கொண்டு, ஒரு கையில் அணியின் கொடி, டி-சர்ட், மற்றொரு கையில் ரிப்பன்கள், தலையில் தொப்பி அணைந்து விற்பனை செய்து வருகின்றனர். பெண்களும், குழந்தைகளும் கூட இந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருகின்றன. சிலர் குடும்பத்தோடு விற்பனை மேற்கொள்கின்றனர்.



8 வயதிலிருந்து 14 க்குள் இருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஒலி எழுப்பான், ரிப்பன், கொடி ஆகியவற்றையே விற்கின்றனர். ஆட்டம் ஆரம்பிப்பதற்கு 4 மணி நேரம் முன்னதாக வந்து விற்பனையில் ஈடுபடும் இவர்கள் எல்லாம் நாட்களிலும் மைதானத்திற்கு வெளியே விற்பனை செய்வதில்லை. இந்திய அணிகள் விளையாடினால் மட்டுமே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பாடி, பட்டாபிராம், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் இருந்து வருகின்றனர். தற்காலிகமாக நடக்கும் இவ்வியாபாரம் பற்றி வியாபரத்திலிருந்த வாசு என்றவரிடம் கேட்ட போது” கடந்த மூன்று வருடங்களாக டி-சர்ட், கொடி விற்பனை செய்து வருகிறேன். டி-சர்ட் 100 ரூபாய்க்கும், கொடி 20 ரூபாய்க்கும் விற்கிறது. மற்ற நேரங்களில் குடை பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறேன். என்னுடைய மனைவியும் தற்போது என்னோடு விற்பனையில் உள்ளார். நாங்கள் இருவரும் படிக்காதவர்கள் என்று கூறினார். சிறிது தூரத்தில் குடும்பத்தோடு விற்பனை செய்து கொண்டும், சில குடும்பங்கள் உணவருந்திக் கொண்டும் இருந்தனர். அவர்களில் வெங்கடேஸ் என்பவர் ஆட்டோ டிரைவராக கே.கே.நகரில் உள்ளார். அவரும் இத்தொழிலில் குடும்பத்தோடு விற்பனை செய்து கொண்டிருந்தார். அவர் கூறும் போது இதுல ஒரு டி-சர்ட்க்கு 20 -30 ரூ லாபம் கிடைக்கும். இராண்டாயிரம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கிட்டு வந்து குடும்பத்தோட விற்பனை செய்துவிட்டு, மேட்ச் ஆரம்பிக்கும் போது ஸ்டேடியம் உள்ளார போயிட்டு ஜாலியா மேட்ச் பார்போம். இந்த தொழிலில ஒரு ஆறு வருடம் இருக்கேன்.என்றார்.

மேலும் விற்பனையில் ஈடுபட்டிருந்த முனுசாமி தன் மனைவி கைகுழந்தையோடு நின்றார். அவர் கூறும் போது எங்க குடும்கத்துல யாரும் படிக்கல. டி.வி பார்த்து மேட்ச் இருக்குனு தெரிஞ்சுகிட்டு இந்த பொருட்கள வாங்கிட்டு வருவோம். ஆட்ட நேரங்களில் வழக்கமாக ஐம்பது குடும்பங்கள் மேல் இத்தொழில் ஈடுபட்டிருப்போம். நாங்க பண்ணுற குடை ரிப்பேர் பண்ணுர வேலை விட லாபம் அதிகமாக இருக்கு. இந்த தொழில்னால எந்த அங்கீகாரம் இல்லனாலும் எனக்கும், என் குடும்பத்துத்துக்கும் சாப்பாட்டிற்கு கிடைக்குது. எந்தனை கோடி குடுத்து மேட்ச் நடத்தினாலும், எவ்வளவு ரூபா காசு கொடுத்து டிக்கெட் வாங்கினாலும் நாங்க தான் உற்சாகத்தை, ஆரவாரத்தை தொடங்கி வைக்கிறோம். என்றார்.
இந்த சிறு வியாபாரிகளின் தன்னம்பிக்கையும், தங்களால் தான் போட்டியின் உற்சாகம் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது என்ற சிந்தனையும், பிறரை உற்சாகப்படுத்தி மகிழ்ச்சி கொள்ள செய்வது என நாம் அறியாத இவர்கள் வியப்புக்குரியவர்களே.